January 13, 2025

நிலைத்த வேளாண்மையை நோக்கி - மர துவரை

 குரோதி வருடம் ஆவணி மாதம் விதைக்கப்பட்ட மர துவரை இம்மார்கழி மாதம் பூப்பெய்தும் பட்டம் அடைந்துள்ளது.





 வருடாந்திர துவரை செடிகள் மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும். இவை சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் பூ பூக்கின்றன. இவை 4-5 வருடங்கள் நின்று பலன் தரக்கூடியவை. இதன் வேர்கள் ஆழமாய் சென்று நுண் உரங்களை எடுத்து வல்லவை.

குறைந்த மனித சக்தியை உபயோகித்து நிறைந்த அறுவடையை தரக்கூடியவை.




நிலைத்த வேளாண்மைக்கு மற்றும் நிலைத்த பொருளாதாரத்திற்கும் குமரப்பா தன்னிறைவு பண்ணையத்தை இட்டுச் செல்பவை 🙏🏻

January 06, 2025

ஜனவரி 4 ஆம் தேதி ஜே சி குமாரப்பாவின் பிறந்த தினம்

 அவரை நினைவுகூறும் வகையில், அவரது 'நிலைத்த பொருளாதாரம்' புத்தகத்தில் இருந்து ஒரு சில வரிகள் இதோ:


" தாவர உலகில் உயிர் வாழ்க்கை ஒரே இடத்தில் உள்ளது. இருக்கும் இடம் விட்டு வேறு இடத்திற்கு செல்லும் இயக்கம் அங்கு இல்லை. செடியிலிருந்து தானாக உதிரும் விதைகள் நேராகக் கீழே தான் விழ வேண்டும். தாய் செடிக்கு அருகில் தான் விழ வேண்டும். எல்லா விதைகளும் தாய் செடிக்கு அருகில் முளைத்து விட்டால், அது மூச்சு விட கூட முடியாதபடி நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, அவற்றை தொலை தூரத்திற்கு கொண்டு செல்வது அவசியம். இதை செய்ய இயற்கை பறவைகளையும் மிருகங்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்துகிறது. இடம் விட்டு இடம் செல்லும் உயிரினங்கள் ஒரு தனி (விசேஷப்) பணியை செய்கிறது. ஒரு செடியில் உள்ள பழத்தை ஒரு பறவை சாப்பிட்டு அதன் விதையை பல மைல்களுக்கு அப்பால் வெளியேற்றலாம். இவ்வாறு, அது செய்வது தன்னுடைய கட்டாயத்திற்கு உட்பட்டு செய்யவில்லை. தன்னுடைய பசியை தீர்ப்பதற்கு அது உண்கிறது. இவ்வாறு, தன்னுடைய அடிப்படை பணியை செய்யும் போது அது வாழ்க்கைச் சூழலில் தனக்குரிய பங்கையும் செய்து முடிக்கின்றது. 


இவ்வாறு, இயற்கையானது தன்னுடைய எல்லாவித கூறுகளையும் ஈடுபடுத்தி அவற்றின் ஒத்துழைப்பை உறுதி செய்கிறது. ஒவ்வொரு கூறும் தனக்கென உழைக்கும் போதே மற்றவற்றிற்கும் உதவுகின்றது. இயங்க கூடியவை, இயங்காதவற்றிற்கும், புலனறிவு பெற்றவை அவ்வறிவு இல்லாததற்கும் உதவுகின்றன. எனவே, இயற்கையின் எல்லா கூறுகளும் ஒரு பொது குறிக்கோளுக்காக ஒன்றுடன் ஒன்று சங்கிலி போல் தொடர்பு கொண்டுள்ளன. இயற்கை தனக்காகவே இயங்குகிறது. வன்முறை தலைதூக்கி இந்த சங்கிலியைத் துண்டிக்காமல் இந்த இயக்கம் இசைந்து தொடர்ந்தால் நிலைத்த பொருளாதாரம் உருவாகின்றது. "

December 17, 2024

கேப்பை அறுவடை - கையிலா? மெஷினிலா?

விளைந்து நின்ற கேப்பையை ஒரு பகுதி (அரை ஏக்கர்) கையிலும் ஒரு பகுதி (அரை ஏக்கர்) மெஷினிலும் அறுவடை செய்யப்பட்டது. 

நத்தம்பட்டி பெண்கள் கேப்பை கதிர் அறுத்தல் 



நிலத்தில் இறங்கி கதிர் அறுத்து தானியத்தை பிரித்து கொடுக்கும் கருவி 


எங்கள் அனுபவ துளிகள் இதோ:

  •  ஒரு மணி நேரத்திற்கு மெஷின் வாடகை 2500 ரூபாயும் மெஷின் வந்து போகும் செலவுக்கு 2500 ரூபாயுமாக மொத்தம் 5000 ருபாய் செலவானது.

  • கையில் அறுவடை செய்ய இரண்டு நாட்களாக  10 பெண்கள் வந்து சென்ற செலவு மொத்தம் 8000 ருபாய். மேலும் கதிரில் இருந்து தானியத்தை பிரித்தெடுக்க சிறிய மெஷின் வாடகை 1000 ருபாய். அறுத்த கதிரை களத்திற்கு எடுத்து வந்து மூட்டை பிடிக்க ஊழியர்கள் ஊதியம் 1000 ருபாய். மொத்த செலவு 10000 ருபாய் 

  • மெஷின் அறுவடையில் சேதாரம் 25% மேல் இருக்கும். கை அறுவடையில் சேதாரம் மிக குறைவே 

  • அறுவடை ஆரம்பிக்கும் முன்னரே நல்ல கதிர்களை இனம் கண்டு அடுத்த முறை பயிரிட விதைகளை சேகரித்தல் நல்லது 

  • பொருளாதார ரீதியில், மெஷின் அறுவடையில் சிறிது சேமிப்பு வந்தாலும், மனித வள மேம்பாடு மற்றும் உள்ளூர் பொருளாதார மேம்பாடு, வட்டார வளர்ச்சி ஆகிய தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்தால், கையால் அறுவடை செய்வதே உகந்ததாய் படும்.
மேலும், இவ்வகை பெரிய இயந்திரங்களில் ஒவ்வொரு தானியத்திற்கும் தனித்தனி பிட்டிங்குகள் வாங்க வேண்டும். நெல்லுக்கு, மக்காச்சோளத்திற்கு எல்லாம் நம் வட்டாரத்தில் நிறைய பேரிடம் பிட்டிங்குகள் உள்ளது. ஆனால் இப்போதெல்லாம் கேப்பை (தே கல்லுப்பட்டி ஊராட்சியில்) நிறைய இடங்களில் பயிரிடப்படாததால்,  அறுவடை மெஷின் இருக்கும் பல பேரிடம் இந்த கேப்பைக்குரிய பிட்டிங் இருப்பதில்லை.....

June 10, 2024

11 கார்த்திகை பௌர்ணமி சோபகிருது (27 Nov 2023)

வளர்பிறை 

பண்ணைக்கு 7 பெண்கள் வேலைக்கு வர ஆரம்பித்துள்ளார்கள்.

80 சென்டில் பயிரிடப்பட்டிருந்த எள்ளு அறுவடை செய்யப்பட்டு வயலிலேயே பாதியும் கால்நடை கொட்டாரத்தில் பாதியும் காய வைக்கப்பட்டது. ஆனால் மழையின் காரணமாக, ஏராளமான பூச்சிகளும் பூஞ்சையும் தாக்கி முழு பயிரும் அழிந்துவிட்டது.

அரை ஏக்கரில் போடப்பட்ட பாசிப்பயறு அறுவடை செய்யப்பட்டு 14 கிலோ சேமிப்பறையில் வைக்கப்பட்டுள்ளது. 


தேய்பிறை 

வெள்ளாமை 

ஐய்ப்பசி கடைசியில் தொடங்கிய குதிரைவாலி அறுவடை 4 ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 19 ஆள் நாட்கள் ஆயிற்று 1.5 ஏக்கர் அறுவடை செய்ய. அறுவடை செய்யபட்ட கதிரை கால்நடை கொட்டாரத்தில் 2 நாட்கள் காய விட்டு, பதனபடுத்தும் கருவி கொண்டு, தானியங்கள் பிரிக்கப்பட்டு, கண்டெய்னர் உள்ளே உலர்த்த விடபட்டது. பாப்பையாபுரம் நாகராஜ் (99435 95304) அவரது தானியம் பிரித்தெடுக்கும் மெஷினை நன்றாக பராமரித்து சுத்து வட்டார மக்களுக்கு உதவுகிறார். 

இப்போதெல்லாம் எல்லோரும் பெரிய மெஷினை நேராக வயலுக்கே கொண்டு சென்று செடியில் இருந்தே தானியத்தை பிரித்தெடுக்கும் விதத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில், கதிர் அறுத்து களத்திற்கு தூக்கி செல்லும் கூலியாட்கள் செலவு  மிச்சமாகிறது. ஆனால், இதில் 25% தானியம் வீணாகிறது.



பழத்தோட்டம் 

20 Nov - இன்று கொய்யா தோட்ட களை எடுப்பு ஆரம்பிக்கபட்டுள்ளது.   

கால்நடை 

20 Nov: ரொம்ப நாள் அடை காத்த கோழி இன்று 7 குஞ்சுகள் பொரித்துள்ளன.


5 ஐய்ப்பசி: பண்ணைக்கு 5 ஆடுகள் கொண்டு வரப்பட்டன. ஒரு தாய் ஆடும் 4 குட்டிகளும்! தாய் ஆடும் ஒரு குட்டி ஆடும் சினையாக உள்ளதாக சொல்கிறார்கள். மொத்த விலை 25 ஆயிரம்.


உர தயாரிப்பு 

பண்ணைக்கு 8 டிராக்டர் லோடு மாட்டு சாணம் வந்திறங்கியது. 


மற்ற தகவல்கள் 

பண்ணைக்கு வந்த புதிய கருவி:

  1. சிவகாசி பழ கடையில் வாங்கிய பழைய எடை மெஷின்
  2. பழைய குளிர் சாதன பெட்டி ஒன்று வாங்கி ரிப்பேர் செய்யப்பட்டது 
  3. 4 எண்ணம் பண்ணை அருவாள் - சிவகாசியிலிருந்து 
  4. 5 எண்ணம் களை வெட்டுவான் - சிவகாசியிலிருந்து 



நிலைத்த வேளாண்மையை நோக்கி - மர துவரை

  குரோதி வருடம் ஆவணி மாதம் விதைக்கப்பட்ட மர துவரை இம்மார்கழி மாதம் பூப்பெய்தும் பட்டம் அடைந்துள்ளது.  வருடாந்திர துவரை செடிகள் மஞ்சள் நிறத்த...